Skip to main content

2. கல்வி கடமை

சந்தம்

தந்த தனன தனனா தனனதன
    தந்த தனன தனனா தனனதன
        தந்த தனன தனனா தனனதன ...... தனதான

பாடல்

கல்வி கடமை கடனே இடையிலுற
கள்ளும் களிப்பும் களவே பெருகிவளர்
கந்த குமர குகனை நிறைபொருத ...... மறந்தேங்கி

மறந்த அறமும் திறமும் தடையுமுற
மரத்த குரலும் குறையே உடலிலுறு
மருத முரளி மருகா வெனதிளைக்கும் ...... மனம்மாறி

மனதை மிரளு மிருளும் மிருககுணம்
மிண்டு மாளு மொளியும் அழுந்தியுயிரும்
மடியும் நாளும் பொழுதும் நெருங்கிவர ...... துயரோங்கி

துயரு முறவு முறையே பிறவிச்சுழர்
விடையு முணரும் கணமே பிறியுமுயிர்
பறிக்கும் படர்கள் வரவும் வேலைவிடும் ...... பெருமாளே

சுவாமி மலையி னிறையே மனங்குளிர
தந்தைக் கருளும் குருவே கருந்தளிரை
குறவை மகளி னிடையே கைபொருத ...... விநோதனே

சொல் விளக்கம்

கல்வி கடமை கடனே இடையிலுற ...... கல்வியால் கடமையை உணர, கடமையால் கடனை வாங்கும், இவை இடையில் வந்து

கள்ளும் களிப்பும் களவே பெருகிவளர் ...... கள்ளில் களித்திருந்து களவு மிகவும் வளர்ந்து நொந்து

கந்த குமர குகனை நிறைபொருத மறந்தேங்கி ...... குமரனை மறந்து அவன் திருவருளுக்காக ஏங்கி

மறந்த அறமும் திறமும் தடையுமுற ...... அறத்தை மறந்து திறமையும் மங்கி

மரத்த குரலும் குறையே உடலிலுறு ...... குரலும் தொலைந்து ஊமையாய் உடல் முழுதும் குறையேறி

மருத முரளி மருகா வெனதிளைக்கும் மனம்மாறி ...... மருத நிலத்தை ஆளும் மாலின் மருமகனை சிந்தையில் நிறுத்தாது மனம் மாறிப்போய்

மனதை மிரளு மிருளும் மிருககுணம் ...... மனதை மிரள செய்யும் இருளும், உள்ளிருக்கும் மிருக குணமும்

மிண்டு மாளு மொளியும் அழுந்தியுயிரும் ...... அக்குணத்தால் செய்த மிண்டுகள் (தவறுகள்), அதனால் மங்கி போன உள்ளொளி அழுந்தி போனது

மடியும் நாளும் பொழுதும் நெருங்கிவர துயரோங்கி ...... உயிர் போகும் நாளும் பொழுதும் நெருங்க, துயர் ஏறியது

துயரு முறவு முறையே பிறவிச்சுழர்
விடையு முணரும் கணமே பிறியுமுயிர்
பறிக்கும் படர்கள் வரவும் வேலைவிடும் பெருமாளே
...... உறவும் அதனால் ஏற்படும் துயரும் சுழலும் பிறவியின் முறை என்ற உண்மையை அறியும் கணம் உயிர் பிரிய, எம் தூதர்கள் அவ்வுயிரை பறிக்க முற்படும் போது, வேலை எய்து காக்க வேண்டும் எங்கள் பெருமாளே

சுவாமி மலையி னிறையே மனங்குளிர
தந்தைக் கருளும் குருவே கருந்தளிரை
குறவை மகளி னிடையே கைபொருத விநோதனே
...... சுவாமி மலையின் இறைவா, மாமுனி சிவனின் மனம் குளிர, குரு உபதேசம் செய்த முருகா, கருமையான தளிரை போல் தோற்றமுடைய வள்ளியின் இடையில் கை பொருந்தும் விநோதனே.